Chereads / Tamil Christian messages / Chapter 35 - அன்றன்றுள்ள அப்பம்*

Chapter 35 - அன்றன்றுள்ள அப்பம்*

*அன்றன்றுள்ள அப்பம்*

*நவம்பர் 24 புதன்கிழமை 2021*

*மூன்று ஆலோசனைகள்!*

*"நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்" (ரோமர் 12:12).*

*மேலே குறிப்பிட்ட வசனத்திலே, மூன்று முத்தான ஆலோசனைகளை ஆவியானவர் நமக்குத் தந்திருக்கிறார். ஒரு கிறிஸ்தவன் நம்பிக்கையிலே, உபத்திரவத்திலே, ஜெபத்திலே எப்படி இருக்க வேண்டுமென்று இந்த வசனம் அருமையாகப் போதிக்கிறது.*

*முதலாவது, நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள். உலகத்தார் தங்களுடைய நம்பிக்கையை பணம், செல்வம் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றின்மேல் வைக்கிறார்கள். சரீர பெலத்திலும், ஆரோக்கியத்திலும் வைக்கிறார்கள். ஆனால் அவைகளெல்லாம் ஒரு நாள் மனுஷனைக் கைவிடுகின்றன. ஆனால், உங்களுடைய நம்பிக்கையோ கர்த்தரின்மேல் இருக்கட்டும்.*

*தாவீது சொல்லுகிறார்: "எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப் போகாதிருந்தார்கள். கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்" (சங். 22:4,5,10).*

*நீங்கள் கிறிஸ்துவை நம்புவீர்களென்றால் கிருபை உங்களை சூழ்ந்துக் கொள்ளும் (சங். 32:10). இந்த நம்பிக்கையிலே நீங்கள் மகிழ்ந்து களிகூருவீர்களாக. கர்த்தரை நம்பியிருக்கிற மனுஷன் நிச்சயமாகவே பாக்கியவான் (சங். 84:12).*

*இரண்டாவது, உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள். உபத்திரவம் என்பது பூலோகத்தில் பிறந்த ஒவ்வொருவரையும் சந்திக்கிறது. சிறியவரானாலும் பெரியவரானாலும், படித்தவரானாலும் படியாதவரானாலும், வேற்றுமையின்றி அது அனைவரையும் சந்திக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு உபத்திரவமே கிடையாது என்று எண்ணி விடக்கூடாது. இயேசு சொன்னார், "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்" (யோவான் 16:33).*

*உபத்திரவ நேரத்தில் கலங்காமல் பொறுமையாயிருக்க நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். கலங்குவதும், பதறுவதும் சாத்தானையே மகிழச் செய்யும். உபத்திரவத்தின் பாதையே உங்களைப் பரலோகத்தில் சேர்க்கிறது. ஆகவே உபத்திரவத்தில் பொறுமையாய் இருங்கள். அப். பவுல், அநேக உபத்திரவங்களின் வழியாய் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று ஆலோசனை கூறுகிறார் (அப். 14:22).*

*மூன்றாவது, ஜெபத்திலே உறுதியாயிருங்கள். நீங்கள் சோர்ந்துபோகாமல் ஜெபிக்க வேண்டும். ஜெபிக்கிற ஜெபம் உறுதியானதாய் இருக்க வேண்டும். சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபிக்க வேண்டுமென்பதை விளக்கக் கர்த்தர் ஒரு உவமையையும் சொன்னார். எப்பொழுதும் நியாயாதிபதியை தொந்தரவு செய்த அந்தப் பெண்ணுக்கு எப்படி நீதி கிடைத்தது என்பதைப் பார்க்கிறோம் (லூக். 18:5). தேவபிள்ளைகளே, உங்களுடைய ஒவ்வொரு ஜெபத்திற்கும் பதில் உண்டு என்பதை மறந்துபோகாதேயுங்கள்.*

*நினைவிற்கு:- "அவர்கள் ஜெபம் பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவ வசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்" (அப். 4:31).*

*இன்றைய வேத வாசிப்பு*

*காலை - எசேக்கியேல் : 22,23*

*மாலை - 1 பேதுரு : 1*