Chereads / Tamil Christian messages / Chapter 37 - மாலை - 1 பேதுரு : 2*

Chapter 37 - மாலை - 1 பேதுரு : 2*

*அன்றன்றுள்ள அப்பம்*

*நவம்பர் 25 வியாழக்கிழமை 2021*

*மூன்று தீர்மானங்கள்!*

*"இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்" (1 கொரி. 2:2).*

*உங்கள் வாழ்க்கையில் எடுக்கும் உறுதியான தீர்மானமே உங்களைப் பாதுகாப்பதுடன் கர்த்தரிடத்திலிருந்து ஆசீர்வாதத்தையும், கிருபையையும் பெற்றுத் தருகிறது. வேதத்தில் உள்ள சில பக்தர்கள் எடுத்துக்கொண்ட மூன்று தீர்மானங்களைக் குறித்து சற்று தியானிப்போமா?*

*முதலாவது, தானியேலின் தீர்மானம்:- தானியேல் தன்னை பரிசுத்தமாய்ப் பாதுகாத்துக்கொள்ளும்படி பாபிலோனிய ஆவியோ, போஜனமோ தன்னைத் தீட்டுப்படுத்தக் கூடாது என்று தீர்மானம் செய்தான். வேதம் சொல்லுகிறது: "தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்" (தானி. 1:8).*

*இந்த தீர்மானத்தினால் கர்த்தர் அவனுக்கு பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படிச் செய்தார் (தானி. 1:9). அவனுடைய சரீரம் மற்ற வாலிபரைப் பார்க்கிலும் புஷ்டியுள்ளதாயும் முகம் களையுள்ளதாயும் காணப்பட உதவி செய்தார் (தானி. 1:15). மட்டுமல்ல, பாபிலோனிலுள்ள எல்லா சாஸ்திரிகளையும், ஜோசியர்களையும் பார்க்கிலும் பத்துமடங்கு ஞானத்திலும், புத்தியிலும் சமர்த்தனாக்கினார் (தானி. 1:20).*

*இன்று நீங்கள்கூட உங்களைக் கர்த்தருக்கென்று பரிசுத்தவான்களாக ஒப்புக்கொடுங்கள். உலகத்திலுள்ள எந்த அசுத்தங்களும், கேடுகளும், இச்சைகளும் உங்களைத் தீட்டுப்படுத்த ஒருபோதும் இடங்கொடாதேயுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களைப் பாதுகாப்பதுடன் ஆசீர்வதித்தும் உயர்த்துவார்.*

*இரண்டாவது, யாக்கோபின் தீர்மானம்:- "தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் (யாக்கோபு) பொருத்தனை பண்ணிக்கொண்டான்" (ஆதி. 28:22). கர்த்தருக்கு உற்சாகமாய்க் கொடுக்க அவன் தன் இருதயத்தில் தீர்மானித்ததினால், கர்த்தர் அவன் மேல் பிரியமாய் இருந்தார். வெறுங்கையாய் யோர்தானைத் தாண்டிச் சென்ற அவன், மிகுந்த ஆஸ்தியோடும், வேலைக்காரர்களோடும் இரண்டு பரிவாரங்களோடும் திரும்பி வரும்படி கர்த்தர் இரக்கம் பாராட்டினார் (ஆதி. 32:10).*

*மூன்றாவது, தாவீதின் தீர்மானம்:- தாவீது வேதத்தை நேசிக்கவும், வேதத்திலுள்ள கற்பனைகளுக்கு முழுவதும் கீழ்ப்படியவும் தீர்மானித்தார். "கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன்" என்றார் (சங்.119:57). தாவீதினுடைய ஆர்வத்தைக் கண்ட கர்த்தர் அவரை உயர்த்தி, முழு இஸ்ரவேலின் மேலும் இராஜாவாய் மாற்றினார்.*

*தேவபிள்ளைகளே, நீங்கள் வேதத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்களென்றால், கர்த்தர் உங்களுடைய வாழ்க்கை முழுவதும் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார். நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை.*

*நினைவிற்கு:- "உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்" (சங். 119:16).*

*இன்றைய வேத வாசிப்பு*

*காலை - எசேக்கியேல் : 24,25,26*

*மாலை - 1 பேதுரு : 2*