Chereads / Tamil Christian messages / Chapter 40 - அன்றன்றுள்ள அப்பம்*

Chapter 40 - அன்றன்றுள்ள அப்பம்*

*அன்றன்றுள்ள அப்பம்*

*நவம்பர் 30 செவ்வாய்க்கிழமை 2021*

*மேகத்தின் நிழல்!*

*"இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது" (மத். 17:5).*

*கிறிஸ்துவும், அவருடைய மூன்று சீஷர்களும் தனியாகச் சென்று மறுரூப மலையில் ஜெபிக்க ஆரம்பித்தபோது, கிறிஸ்துவின் முகம் மறுரூபமானது. சூரியனைப்போல அவர் முகம் பிரகாசித்தது. அவருடைய வஸ்திரம் வெளிச்சத்தைப் போல வெண்மையாயிற்று.*

*அப்போது மோசேயும், எலியாவும் அவரோடு பேசுகிறவர்களாகக் காணப்பட்டார்கள். அவர்கள் பேசுகையில், ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள் மேல் நிழலிட்டது. அந்த நிழல் எத்தனை அருமையானதாய் இருந்திருக்கும்! அது அருமையான வெளிப்பாடுகளை கர்த்தருடைய சீஷர்களுக்குக் கொடுத்தது. மேகத்தின் நிழலிலே உன்னதமான ஆவிக்குரிய இரகசியங்களை அறிய முடியும். மேகம் நிழலிட்டதுபோல ஆவியானவர் உங்கள்மேல் நிழலிடுகிறார். பரலோகத்தின் ரகசியங்களையும், வெளிப்பாடுகளையும் உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்.*

*அன்று மறுரூப மலையிலே மேகம் நிழலிட்டதைத் தொடர்ந்து கர்த்தருடைய குரல் அங்கே ஒலித்தது. "இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று" (மத். 17:5).*

*பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனங்கள் மேகஸ்தம்பத்திற்கு கீழாக நடந்து வந்தார்கள். அந்த மேகஸ்தம்பம் இஸ்ரவேலருக்கு நிழலைக் கொடுத்தது. அதினால் சூரியனுடைய வெயிலின் அகோரம் தாக்காமல் அவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள். அவர்கள் மேகத்தின் நிழலின் கீழ் இருந்தபடியினாலே உஷ்ணத்தினால் அவர்கள் சோர்வடையவில்லை. உஷ்ணம் சம்பந்தமான எந்த வியாதியும் அவர்களை அண்டவில்லை.*

*மேகஸ்தம்பமானது சூரியனுடைய உஷ்ணத்தைத் தடுத்து, அந்த உஷ்ணத்தை தன்மேல் ஏற்றுக்கொண்டு குளிர்ச்சியான நிழலை இஸ்ரவேலருக்கு கொடுத்ததைப் போல, கிறிஸ்துவானவர் பிதாவுக்கும் ஜனங்களுக்கும் இடையிலே மத்தியஸ்தரானார். நியாயத்தீர்ப்பு வரும்போதும், கோபாக்கினை வரும்போதும், கிறிஸ்து மேகஸ்தம்பமாக நின்று அதைத் தடுத்து, தம்முடைய பிள்ளைகளைப் பாதுகாத்துக்கொள்ள கிருபையுள்ளவராய் இருக்கிறார். சிலுவையின் நடுவிலே அவர் நின்று, சிலுவையில் சிந்தின தம்முடைய இரத்தப் பெருந்துளிகளினாலே பரலோக தேவனுக்கும் பாவமுள்ள மனுஷனுக்கும் மத்தியஸ்தம் செய்தார்.*

*அப். பவுல், "நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள். எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்" (1 கொரி. 10:1,2) என்று குறிப்பிடுகிறார்.*

*கிறிஸ்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்போது ஒரு மேகம் அவரைச் சூழ்ந்துகொண்டது. நிழலிட்ட அந்த மேகம் கிறிஸ்துவை அருமையாகச் சுமந்து சென்றது. தேவபிள்ளைகளே, மேகத்தின் மேல் சென்றவர் மேகங்களுடனே வருகிறார். எக்காள சத்தம் தொனிக்கும்போது, நீங்களும் மேகங்கள் மேல் எடுத்துக்கொள்ளப்பட்டு கிறிஸ்துவோடுகூட என்றென்றைக்கும் இருப்பீர்கள்.*

*நினைவிற்கு :- "இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும்" (வெளி. 1:7).*