*MORNING MANNA TAMIL*
2021 NOVEMBER 24
*உன்னுடைய மிகச் சிறந்ததை வீணாக்காதே !*
*"இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்" (மாற்கு 14:8).*
இங்கிலாந்து தேசத்தை. அரசாட்சி செய்துவந்த விக்டோரியா மகாராணியார்
தேவபக்தியுள்ள ஒரு பெண்மணியாக இருந்ததால் குடிமக்களின் நலனைக் குறித்து மிகுந்த கரிசனையுள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் அவ்வப்போது ஒரு சாதாரண பிரஜையைப் போல் உடை அணிந்து, தெருக்களின் வழியாக நடந்து செல்வது வழக்கம். ஒரு நாள் அவர்கள் அவ்விதம் நடந்து சென்றுகொண்டிருக்கையில், மழை பெய்யத் தொடங்கிற்று. அருகாமையில் இருந்த நல்ல வசதி படைத்த ஒருவரது வீட்டின் கதவை அவர்கள் தட்டி, தனக்கு ஒரு குடையை இரவலாகத் தர முடியுமா என்று கேட்டார்கள், கதவைத் திறந்த பெண்மணி, தன்னிடம் இரண்டு குடைகள் இருப்பதாகக் கூறி, அவற்றுள் பழையதை அவர்களுக்குக் கொடுக்க முன்வந்தார். விக்டோரியா மகாராணியார் அப்பழைய கிழிந்த குடையை வாங்கிக் கொண்டு சென்றார்கள் அரண்மனையைச் சென்றடைந்தவுடன் குடையை அந்தப் பெண்மணிக்குத் திருப்பிக்கொடுக்கும்படி ஒரு தாதியை அணுப்பி, குடை கொடுத்தமைக்காக விக்டோரியா மகாராணியார் அவளுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறச் சொன்னார்கள். தன்னுடைய வீட்டிற்கு வந்தது மகாராணியார் என்பதை அறிந்தபோது, பேரதிர்ச்சியடைந்த அவள், தான் அவர்களுக்கு நல்ல குடை கொடுக்கத் தவறியதை எண்ணியெண்ணி மனம் வருந்தினாள். மகாராணியாருக்கு மிகச் சிறந்ததைச் செய்ய தனக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பினைத் தான் தவறவிட்டதற்காக அவள் ஆழ்ந்த வருத்தமடைந்தாள்.
பெத்தானியாவை சேர்ந்த மரியாள் கர்த்தராகிய இயேசுவின் பாதத்தில் மிகச்சிறந்த தைலத்தை வார்த்து, அதை அவருக்கென்று அர்ப்பணித்தபோது, அது வீணான செலவு என்று பலரும் எண்ணினர். குறிப்பாக யூதாஸ்காரியோத்து அவளது அச்செயலினிமித்தம் கோபமுற்று, அந்தப் பணம் தரித்திரருக்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமென்று கூறினான் (யோவான் 12:5). ஆனால் அது பற்றிய கர்த்தராகிய இயேசுவின் கணிப்போ வித்தியாசமாயிருந்தது. அவர் அவளது செயலைப் பாராட்டி ஏற்றுக்கொண்டார்.
கர்த்தராகிய இயேசுவுக்காக நீங்கள் அன்போடுகூட செய்யும் யாதொன்றும். ஒருபோதும் வீணானது அல்ல; ஆனால் அது நித்தியமான ஒரு முதலீடே ஆகும். *பிதாவானவர் மிகச் சிறந்ததை - கர்த்தராகிய இயேசுவை நமக்குத் தந்தார். கர்த்தராகிய இயேசு மிகச் சிறந்ததை - தம்முடைய ஜீவனை - நமக்காகத் தந்தார். நாமும்கூட நம்மிடத்திலுள்ள மிகச் சிறந்ததைக் கர்த்தருக்குக் கொடுக்க வேண்டாமா?*
மரியாள் கர்த்தராகிய இயேசவுக்குச் செய்த காரியம் வீணென்று யூதாஸ்காரியோத்து கருதினான். ஆனால் அவனுடைய ஜீவியத்தைப் பாருங்கள் - அவன் தன்னுடைய சொந்த ஜீவியத்தை வீணாக்கிவிட்டான்; இப்போதுங்கூட நரகபாதாளத்தில் அவன் தன்னுடைய ஜீவியத்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறான்; நித்தியம் முழுவதும் அவன் அதை வீணாக்கிக்கொண்டிருப்பான்.
அருமையான நண்பனே, உன்னுடைய மிகச் சிறந்ததை - உன்னுடைய நேரம், தாலந்துகள், உனக்கு அருமையானவையாகவும், விலையேறப்பெற்றவையாகவும் நீ கருதுபவை, மற்றும் உனக்கிருக்கும் எல்லாவற்றையும் கர்த்தராகிய இயேசுவுக்குக் கொடுப்பாயாக.
'ஒரே ஒரு வாழ்க்கை மட்டுமே, அது சீக்கிரமாக கடந்துபோகும்;
கிறிஸ்துவுக்காகச் செய்யப்படுவது மட்டுமே நிலைக்கும்;
அவருடைய சித்தம் செய்ய ஒரே ஒரு தருணமே உண்டு;
ஆகவே உன் நாட்களையொல்லாம் இயேசுவுக்குக் கொடு;
பிரதிபலன் தரக்கூடிய ஒரே வாழ்க்கை அதுவே!
ஏனெனில் ஒரே ஒரு வாழ்க்கையே அன்றி வேறொன்றுனக்கில்லை !