Chereads / Tamil Christian messages / Chapter 6 - *MORNING MANNA TAMIL*

Chapter 6 - *MORNING MANNA TAMIL*

*MORNING MANNA TAMIL*

2021 OCTOBER 13

*இரண்டு கிரீடங்கள்‌*

*"நீர்‌ அவனைத்‌ தேவதூதரிலும்‌ சற்று சிறியவனாக்கினீர்‌; மகிமையினாலும்‌ கனத்தினாலும்‌ அவனை முடிசூட்டினீர்‌" (சங்‌. 8:5)*

*தேவன்‌ நமக்கு இரண்டு கிரீடங்களைத்‌ தர விரும்புகிறார்‌. அவை மகிமையின்‌ கிரீடமும்‌ கனத்தின்‌ கிரீடமும்‌ ஆகும்‌.*

தேவன்‌ மனிதனைச்‌ சிருஷ்டித்தபோது, மகிமை, கனம்‌ ஆகிய இவ்விரண்டு கிரீடங்களினாலும்‌ அவனை முடிசூட்டினார்‌ என்பது கவனிப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது. ஆனால்‌ பாவம்‌ அவனுக்குள்‌ பிரவேசித்தபோது, அவனுடைய தலையினின்று கிரீடங்கள்‌ விழுந்தன - மனிதன்‌ தன்னுடைய மகிமையையும்‌ கனத்தையும்‌ இழந்தான்‌. *"வெட்கப்பட்டோம்‌; ... நாணம்‌ நம்முடைய முகங்களை மூடிற்று; எல்லாரும்‌ பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களானார்கள்‌" (எரே. 51. 51; ரோமர்‌ 3. 23).*

ஆயினும்‌, இக்கிருபையின்‌ காலத்தில்‌ மீண்டும்‌ மகிமையினாலும்‌ கனத்தினாலும்‌ முடிசூட்டப்படும்படி தேவன்‌ ஒரு புதிய மனிதனைச்‌ சிருஷ்டித்துக்கொண்டிருக்கிறார்‌. நாம்‌ எவ்வாறு இந்தக்‌ கிரீடங்களைப்‌ பெற்றுக்கொள்ளுகிறோம்‌? மகிமை என்றால்‌ என்ன? *'பரிசுத்தத்தில்‌ மகிமையுள்ளவராகிய உமக்கு ஒப்பானவர் யார்‌?' (யாத்‌. 15 : 11 - Eng).* நம்முடைய தேவன்‌ பரிசுத்தத்தில்‌ மகிமையுள்ளவராயிருப்பதால்‌, தேவனுடைய பரிசுத்தமே மெய்யான மகிமையாகும்‌. கனம்‌ என்றால்‌ என்ன? *'கனத்துக்கு முன்னானது தாழ்மை' (நீதி. 5 : 33).* ஆகவே, மகிமையின்‌ கிரீடமும்‌ கனத்தின்‌ கிரீடமும்‌ தேவனுடைய பரிசுத்தத்தையும்‌, அவருடைய தாழ்மையையும்‌ குறிக்கின்றன.

பொதுவாக ஒரு கிரீடமானது தலையின்‌ மேலேயே வைக்கப்படுகிறது. தலை என்பது நம்முடைய எண்ணங்களைக்‌ காட்டுகிறது. சில சமயங்களில்‌ நம்முடைய வார்த்தைகளிலும்‌ புறம்பான தோற்றத்திலும்‌ பரிசுத்தமும்‌ தாழ்மையும்‌ இருக்கக்கூடும்‌; ஆனால்‌ நம்முடைய எண்ணங்களில்‌ அவை இல்லாமலிருக்கலாம்‌. நம்முடைய மனது அல்லது சிந்தனைகளெல்லாம்‌ தம்முடைய தாழ்மையினாலும்‌ தம்முடைய பரிசுத்தத்தினாலும்‌ நிறைந்திருக்க வேண்டுமென்று தேவன்‌ விரும்புகிறார்‌. அவையே நமக்கு மகிமையின்‌ கிரீடமாகவும்‌ கனத்தின்‌ கிரீடமாகவும்‌ இருக்கும்‌.

*பரிசுத்தமும்‌ தாழ்மையும்‌ நம்முடைய எண்ணங்களை அலங்கரிக்காவிடில்‌, நாம்‌ அவமானத்தோடுதான்‌ ஜீவித்துக்கொண்டிருக்கிறோம்‌. அதினிமித்தம்‌ நம்முடைய தலையினின்று கிரீடம்‌ விழுந்துவிட்டது' என்பதை நாம்‌ விளங்கிக்கொள்ள வேண்டும்‌.*

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀