Chereads / Tamil Christian messages / Chapter 18 - Our Daily Bread (Tamil)*

Chapter 18 - Our Daily Bread (Tamil)*

*🍞நமது அனுதின மன்னா* *_28-10-2021_*

*Our Daily Bread (Tamil)🍞*

*தேவன் கேட்கிறாரா?*

_வாசிப்பு: 1 யோவான் 5.13-15 | ஓராண்டில் வேதாகமம்: எரேமியா 15 ; எரேமியா 16 ; எரேமியா 17 ; 2 தீமோத்தேயு 2_

_நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். 1 யோவான் 5:14_

_எங்களுடைய திருச்சபை ஆராதனைக் குழுவில் நான் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, என்னுடைய வேலை என்னவெனில், ஆராதனை நேரத்தில் அட்டைகளில் எழுதிக் கொடுத்த ஜெபக்குறிப்புகளுக்காய் நாங்கள் ஜெபிக்கவேண்டும். அத்தையின் சுகத்திற்காக, தம்பதியினரின் பணத்தேவைக்காய், தன் பேரப்பிள்ளை தேவனை அறிந்துகொள்வதற்காய் என்று எழுதப்பட்டிருக்கும். இந்த ஜெபத்திற்கான பதில்களைக் குறித்த சாட்சிகளை நான் அரிதாகவே கேட்க நேர்ந்தது. அதிலும் பெரும்பாலும் யார் என்றும் என்ன விண்ணப்பம் என்றும் எனக்கு தெரிவதில்லை. தேவன் அவர்களுக்கு எப்படி பதில்கொடுக்கிறார் என்பதைக் குறித்து எனக்கு தெரியவில்லை. சில வேளைகளில், அவர் என் ஜெபத்தைக் கேட்கிறாரா? என் ஜெபத்தின் விளைவாய் ஏதாகிலும் பலன் இருக்கிறதா? என்று நானே கேட்டுக்கொள்வேன்._

_நம்மில் அநேகர், "கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்கிறாரா?"என்ற கேள்வியை வாழ்நாளில் பலமுறை கேட்டிருக்கிறோம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அன்னாளைப்போல பிள்ளைக்காய் தேவ சமூகத்தில் விண்ணப்பித்து, ஆண்டுகளாய் என் விண்ணப்பத்திற்கு பதில் இல்லை. ஆயினும் என்னுடைய விண்ணப்பத்தில் என் தந்தை தேவனை விசுவாசிக்க துவங்கினார். எனினும் அதை வெளிப்படையாய் பிரதிபலிக்காமல் இறந்துவிட்டார்._

_நூற்றாண்டுகளாய் நடந்தேறிய வேதத்தின் சம்பவங்களில் தேவன் பல விண்ணப்பங்களுக்கு செவிசாய்த்துள்ளார்: இஸ்ரவேல் அடிமைத்தனத்திலிருந்து தேவனை நோக்கிக் கூப்பிட்டபோது (யாத். 2:24) ;சீனாய் மலையில் மோசேக்கு (உபாகமம் 9:19) ; கில்காலில் யோசுவாவுக்கு (யோசுவா 10:14) ; பிள்ளைக்கான அன்னாளின் வேண்டுதலின் போது (1 சாமுவேல் 1:10-17) ; சவுலிடத்திலிருந்து தப்பிப் பிழைப்பதற்கு தாவீது விண்ணப்பித்தபோது (2 சாமுவேல் 22:7) என்று பல விண்ணப்பங்களுக்கு தேவன் பதிலளித்துள்ளார்._

_1 யோவான் 5:14ன்படி, நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார். செவிகொடுக்கிறார் என்றால், கூர்ந்து கவனித்து கேட்டதற்கேற்றபடி பதில் கொடுக்கிறார் என்று அர்த்தம்._

_கர்த்தர் செவிகொடுக்கிறவர் என்று சரித்திரத்தில் தேவ ஜனத்திற்கு இருந்த நம்பிக்கையை இன்று நாம் தேவ சமுகத்திற்கு போகும்போது தரித்துக்கொள்வோம். அவர் நம் விண்ணப்பத்திற்கு செவிகொடுக்கிறவர்._

_தேவனிடத்தில் சமீபத்தில் நீங்கள் என்ன விண்ணப்பித்திருக்கிறீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவரிடத்தில் கேட்கும்படிக்கு உங்களை தூண்டியது எது? தேவன் உங்கள் விண்ணப்பத்தைக் கேட்டார் என்பதை எதை வைத்து நம்புகிறீர்கள்?_

*_தகப்பனே, நீர் செய்வேன் என்று சொன்னதினால், நீர் கேட்கிறீர் என்கிற நம்பிக்கையோடே உம்மிடத்தில் விண்ணப்பிக்கிறேன்._*

*Our Daily Bread (Tamil)*